Skip to main content

சூளுரைத்த ஜோ பைடன்.. 48 மணி நேரத்திற்குள் அதிரடி காட்டிய அமெரிக்கா!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

JOE BIDEN

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்குப் பயந்து, தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர். அதேபோல் ஆப்கன் பெண்களின் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் (26.08.2021), ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வெளியே மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 169 ஆப்கானிஸ்தான் மக்களும், 13 அமெரிக்க இராணுவ வீரர்களும் பலியானார்கள்.

 

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கோராசன் அமைப்பு பொறுப்பேற்றது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடி, பழிவாங்குவோம் என சூளுரைத்திருந்தார். 


இந்தநிலையில் ஜோ பைடன் சொன்னபடியே, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்-கோராசான் அமைப்பைக் குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்தபட்ட இந்த தாக்குதலில் ஐஎஸ்-கோராசான் அமைப்பின் தாக்குதல்களுக்குத் திட்டம் தீட்டி வந்தவர் கொல்லப்பட்டதாக கூறியுள்ள அமெரிக்கா, இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பலியான தீவிரவாதிக்கு காபூல் தாக்குதலில் நேரடி தொடர்புள்ளதா என அமெரிக்கா தெளிவுபடுத்தவில்லை.

 

காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் அதற்குப் பழி வாங்கும் விதமாக இந்த அதிரடி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்