மிகப்பெரிய வரலாற்று அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகிறது வெனிசுலா நாடு. நாடு முழுவதும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வாழ வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள 30 சிறை வளாகங்களில் சுமார் 57,000 பேர் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறையில் நேற்று காவலர்களுக்கும் ஆயுதமேந்திய கைதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 23 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறைக்கைதிகள் உரிமைகளுக்கான கண்காணிப்பக தன்னார்வல அமைப்பின் இயக்குநர் ஹம்பர்டோ ப்ராடோ தெரிவிக்கையில், ''நேற்று மாலை முதலில் கைதிகளுக்கிடையேதான் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பலரும் ஆயுதம் ஏந்தியவர்கள். இதனைத் தடுத்து நிறுத்த காவலர்கள் அவர்களுடன் மோதினர். இதனால் 18 காவலர்கள் காயமடைந்தனர். இம்மோதலின்போது ஒரு குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது" என தெரிவித்துள்ளார்.