விவாகரத்து பெற்ற 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொள்ள தம்பதி ஒன்று முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் கெண்டகி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹெரால்டு ஹொலாண்ட் (83) மற்றும் லில்லியன் பேர்ன்ஸ் (78). இவர்கள் இருவரும் கடந்த 1955ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு, 5 குழந்தைகள் பிறந்தனர். ஆனால், ஹொலாண்டின் வேலை நெருக்கடி, குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு, பிரிந்து வாழ்ந்த இவ்விருவரும் இன்னொருவருடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு இவ்விருவரின் இணையர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றில் ஹொலாண்ட் மற்றும் லில்லியன் ஆகியோர் மீண்டும் சந்திக்க நேரிட்டது. வாழ்வின் இறுதிக்காலத்தில் தனிமையில் வாழும் இருவரும், மீண்டும் சேர்ந்து வாழ முடிவுசெய்தனர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மறுதிருமணம் நடத்திவைக்க, இவர்களது பேரன் ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
‘நாங்கள் இருவரும் வாழ்வின் அந்திம தூரத்தை சேர்ந்தே கடக்க இருக்கிறோம்’ என காதல் மிதக்கும் கண்களுடன் பேட்டியளித்திருக்கிறார்.