பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான இடம் வீடு என்றும், நாள் ஒன்றுக்கு 140 பெண்கள் அவர்களது வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொல்லப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நேற்று முன் தினம் (25-11-24) கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஐ.நா பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச் செயல்கள் தடுப்பு அமைப்பான யுஎன்டிஓசி (UNODC) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘2023ல் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமிக்கு கொல்லப்பட்டிருக்கின்றனர். உலகளவில், கடந்த 2023ஆம் ஆண்டு 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60% அதாவது 51,100 பேர் அவர்களின் வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் 21,700 பெண்கள் அல்லது சிறுமிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் 18,500 பேர், அமெரிக்காவில் 8,300 பேர், ஐரோப்பாவில் 2,300 பேர், மற்றும் ஓசியானியாவில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், கொல்லப்படும் பெரும்பாலான பெண்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டு நடந்த இந்த படுகொலைகளில், ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 1,00,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 1,00,000க்கு 1.5 பெண்களும், ஆசியாவில் 1,00,000 பெண்களில் 0.8 பெண்கள் மற்றும் ஐரோப்பாவில் 1,00,000 பெண்களில் 0.6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் என்றாலும், பெண்களும் சிறுமிகளும் தனிப்பட்ட கொடிய வன்முறையால் விகிதாச்சாரத்தில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2023இல் படுகொலை செய்யப்பட்டவர்களில் 80% பேர் ஆண்கள், 20% பேர் பெண்கள். ஆனால் குடும்பத்திற்குள் நடக்கும் கொடூரமான வன்முறைகளால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2023 இல் இணையர்களாலும் குடும்ப உறுப்பினர்களாலும் வேண்டுமென்றே கிட்டத்தட்ட 60% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் 48,000 பெண்கள் மற்றும் சிறுமிகள், தங்களது இணையர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருந்தனர் என்று பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில், இதை ஒப்பிட்டு பார்த்தால் 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அதிகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.