வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக பரவும் தகவல் வதந்தி என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், “பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. பாரதத்தின் குடியரசுத் தலைவர் என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்தியா பெயர் மாற்றம் குறித்து பா.ஜ.க அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை வைத்தால், அது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “உலக நாடுகள் நாட்டின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் அதை ஐக்கிய நாடுகள் பரிசீலிக்கும். கடந்த வருடம் ‘துருக்கி’ யின் பெயரை ‘துருக்கியே’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில், அந்த நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல், இந்தியாவின் பெயர் மாற்றம் பற்றி முறையாக கோரிக்கை வந்தால் அது குறித்து பரிசீலிப்போம்” என்று கூறினார்.