Skip to main content

கஞ்சா ஆபத்தானதில்லை என்ற தீர்மானம்... ஆதரவாக வாக்களித்த இந்தியா...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

UN Court cannabis vote

 

இந்தியாவில் 'கஞ்சா' என்பது போதைப் பொருள் எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனை வளர்ப்பது, விற்பது போன்றவை குற்றமாகும். ஆனாலும் தமிழகத்தில் கள்ளச் சந்தையில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்தில் தினம் தினம் கஞ்சா வழக்குகள் பதிவாகி வருகின்றன. தமிழகத்துக்கு ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் கஞ்சா விற்பனைக்கு வருகின்றன.

 

உலகநாடுகள் பலவற்றிலும், கஞ்சா மருத்துவப் பயன்பாட்டுக்குப் பயன்படுகிறது, மருந்துகள் தயாரிக்கத் தேவைப்படுகிறது என்பதால் அதனைப் பயிர் செய்யவும், விற்பனை செய்வதைத் தடுக்கக்கூடாது எனவும் கூறி, அதனைச் சட்டப் பூர்வமானதாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்தன. அப்படிச் செய்யக்கூடாது எனச் சொல்லும் நாடுகளும் உள்ளன.

 

இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு, டிசம்பர் 3ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தின் 63வது கூட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஆணையப் பிரிவில் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் இந்தியாவும் உண்டு. டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஆபத்தான போதைப்பொருள் என்கிற பட்டியலிலிருந்து கஞ்சாவை நீக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. விவாதத்துக்குப் பின்னர் அதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 52 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அதில் 27 நாடுகள் ஆதரித்தும், 25 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. இதன் மூலம் கஞ்சா ஆபத்தான போதைப் பொருள் அல்ல என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

 

இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொண்டு வாக்களித்தபோது, கஞ்சா ஆபத்தான போதைப் பொருள் அல்ல என்கிற தரப்பிற்கு வாக்களித்துள்ளது. சீனா, ரஷ்யா போன்றவை எதிர்த்து வாக்களித்துள்ளன எனத் தகவல்கள் கூறுகின்றன.


 

சார்ந்த செய்திகள்