கரோனா பாதிப்புக்கு மத்தியில் நோயாளிகளுக்கு உதவும் வகையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளார் ஸ்வீடன் இளவரசி சோபியா.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகக் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ள நிலையில், உலகநாடுகள் அனைத்தும் இதனால் முடங்கிப்போயுள்ளன. இந்தச் சூழலில், ஸ்வீடன் நாட்டின் இளவரசி சோபியா, தனது நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் உதவும் வகையில் தன்னை மருத்துவப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
ஸ்வீடனின் 35 வயதான இளவரசி சோபியா, ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார். கரோனா வைரஸ் பரவும் இந்தச் சூழலில் மக்களுக்கு உதவும் வகையில் அவர் இந்தப் பணியை மேற்கொடுள்ளதாக அந்நாட்டின் அரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்காக பிரத்தியேக பயிற்சி பெற்ற அவர் தற்போது மருத்துவமனையில் தனது பணியைத் தொடங்கியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஸ்வீடனில் இதுவரை 1509 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.