உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தநிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் இந்திய நேரப்படி, மதியம் 2.30 மணிக்கு பெலராஸில் பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய படைகள் தாக்குதலில் வேகத்தை குறைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ரஷ்ய இராணுவம், உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியேறலாம் எனவும், உக்ரைனின் வான்வெளியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச்சூழலில் சீனா ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனை உடனடியாக புதிய சிறப்பு நடைமுறையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர், உயிரை காப்பாற்றிக்கொண்டு ஒடி விடுங்கள் என ரஷ்ய வீரர்களை எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையே இன்னும் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் அதிபரின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.