உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்து வருகிறது. இதனையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகம், தனது தலைநகரமான அபுதாபிக்கு வரும் பயணிகள் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும் என்ற புதிய விதியை அறிவித்துள்ளது. தங்கள் நாட்டு சுகாதார செயலி மூலம் இந்த விதிமுறையை ஐக்கிய அரபு அமீரகம் வெளிவுலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளது.
மேலும் அபுதாபிக்கு வருபவர்கள், இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதால், இந்தியர்கள் அபுதாபிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.