ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா இணைந்து நடத்தும் கரோனா தடுப்பு மருந்து சோதனையில் திருப்திகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகின்றது. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில், சீனாவுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. இரண்டுகட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டச் சோதனையிலும் ஆராய்ச்சி முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்றாம் கட்டச் சோதனைகள் முடிந்த ஆறு வாரம் கழித்து தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனக் கூறியுள்ள அமீரகம், முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.