
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது உலகம் முழுவதும் உள்ள மக்களை கடும் பீதியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு ஹடாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் பிறந்து 10 நாட்களே ஆன யாகீஸ் என்ற ஆண் குழந்தை சிக்கி இருந்த நிலையில், 92 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையுடன் அதன் தாயாரும் மீட்கப்பட்டு இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இருவரின் உடல்நிலை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.