இந்தியா நேபாளம் இடையே ஏற்பட்டுள்ள திடீர் எல்லை பிரச்சனையின் இடையே, நேபாளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க இந்தியர்களின் ஊடுருவலே காரணம் என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை நேபாள எல்லைக்குள் உள்ளடக்கி அந்நாட்டு அரசு அண்மையில் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. நேபாளத்தின் இந்தச் செயல் ஒருதலைபட்சமானது என இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவ்விவகாரம் தற்போது இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நேபாளத்தில் கரோனா பரவல் குறித்துப் பேசியுள்ள அந்நாட்டுப் பிரதமர் கேபி சர்மா ஒலி, “நேபாளத்தில் இதற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் யாருமில்லை. வெளியிலிருந்து வந்தவர்களால்தான் இங்கு கரோனா பரவியுள்ளது. அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாகப் பலர் நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவிலிருந்து பலர் ஊடுருவியதால்தான், பாதிப்பு அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவிலிருந்து வருபவர்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகர்களும், உள்ளூர் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது” எனத் தெரிவித்துள்ளார்.