அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபராகியுள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் 07/01/2021 அன்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு அமெரிக்கத் தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வன்முறை தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ ட்யூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் மட்டுமன்றி, தனது பதவிக்காலம் முடியவில்லை நிலையில், தனக்கு வேண்டிய குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, பிற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட செயல்களை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வன்முறைக்கு ட்ரம்ப்பே காரணம் எனக் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சி, அவரை பதவி விலகக் கோரிக்கை விடுத்தது. அதேபோல, அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் பதவி நீக்கத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே ஆட்சியில் இருக்கும்போது இரண்டு பதவிநீக்க தீர்மானங்களைச் சந்தித்த முதல் அதிபர் என்ற பெயரை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதில் ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து ட்ரம்ப்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தகுதி நீக்கத் தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதிகபட்ச தண்டனையாக,அவர் எந்த அரசு பதவிகளையும் வகிக்கமுடியாத வகையிலான தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.