ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது முதல் இருநாட்டு உறவு மோசமான நிலையை எட்டியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அதன் பின் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதற்கு பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்தத்தை பின்பற்ற மாட்டோம் என ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் அண்மையில் ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் எனக்கூறிய அமெரிக்க அரசு, இதனை காரணமாக வைத்து மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டும் பணி விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் நாட்டின் தெற்கு பகுதி வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்து ஒப்புதல் அளித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை கண்காணிப்பு ரேடார்களை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் டிரம்ப் தனது ஒப்புதலை ரத்து செய்துள்ளார்.
தாக்குதலுக்கு விமானங்களும், கப்பல்களும் தயாரான நிலையில், டிரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாக நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்பின் இந்த தாக்குதல் முடிவால் உலகநாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளன.