நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பிற்கு, உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் முதல் நடவடிக்கையாக, அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வரலாற்றில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒரு பெண்ணை நியமித்திருப்பது இதுவே முதல்முறையாகும். டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார பணியை நிர்வகித்து வந்த சூசி வைல்ஸ் என்பவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, “அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் வெற்றிகளில் ஒன்றை அடைய சூசி வைல்ஸ் எனக்கு உதவினார், மேலும் எனது 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரச்சாரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருந்தார். அவர் கடினமானவர், புத்திசாலி, புதுமையானவர் மற்றும் உலகளவில் மதிக்கப்படுபவர். அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர். அவர் வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய சொத்தாக இருப்பார். அவர் ஒரு நல்ல மனிதர்” என்று கூறினார்.