சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்தின் மக்களும், சவுதியின் இளவரசியுமான ஹசா பின்ட் சல்மான் அல் சவுத்திற்கு சிறை தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவூதி மன்னருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இருக்கும் சொகுசு பங்களாவில் இளவரசி ஹஸா பின்ட் தங்கியுள்ளார். அப்போது அங்கு பிளம்பிங் வேலை பார்ப்பதற்காக வந்த எகிப்து நாட்டை சேர்ந்த பிளம்பரான அஷ்ரப் என்பவரை, தனது பாதுகாவலர்களை விட்டு தாக்கியதோடு, அவரை மோசமான முறையில் நடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இளவரசிக்கு 10 மாத காலம் சிறை தண்டனையும், அவரது பாதுகாவலருக்கு 8 மாத சிறைதண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்புக்கு பின் பேசிய நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் இளவரசிக்கும் சிறைத்தண்டனைக்கு பதிலாக 10 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சத்து 87 ஆயிரம்) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல அவரது பாதுகாவலருக்கு 5 ஆயிரம் யூரோ (ரூ.3 லட்சத்து 93 ஆயிரம்) அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.