200 க்கும் மேற்பட்ட டால்பின்கள் கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய சம்பவம் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் நடந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள போன் விஸ்டா என்னும் தீவின் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட டால்பின்களை அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. சுமார் 200 டால்பின்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய நிலையில், அங்கு இருந்த பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றில் சிலவற்றை எடுத்து மீண்டும் கடலுக்குள் தள்ளினர். இருப்பினும் அவை அனைத்தும் மீண்டும் கடற்கரைக்கே திரும்பின. இதுவரை உயிரிழந்த டால்பின்களில் 136 டால்பின்கள் புல்டோசர்கள் உதவியுடன் புதைக்கப்பட்டன. மேலும் 50 டால்பின்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கடல் மாசுபடுத்தலால் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடந்து வந்தாலும், இவ்வளவு அதிக அளவிலான டால்பின்கள் ஒரே நேரத்தில் இறந்தது இல்லை என அச்சத்துடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 26 அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.