பாகிஸ்தானில் தங்களது வாடிக்கையாளர்களின் தாடியை ஸ்டைலாக வெட்டியதற்காக முடிதிருத்துபவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தை சேர்ந்த 4 முடிதிருத்துபவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் சொல்லியது போல தாடியை வெட்டியுள்ளனர். ஆனால் அந்த தாடி இஸ்லாமிய விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி காவல்துறையினர் அப்பகுதியில் முடி திருத்தம் செய்யும் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள முடி திருத்துபவர்கள் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, இந்த செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முடிதிருத்துபவர்கள் தொழிற்சங்கம், வாடிக்கையாளர்களுக்கு தாடி ஸ்டைலாக வடிவமைப்பதை தடைசெய்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டதால், விதிகளை மீறி தாடியை வெட்டிவிட்ட 4 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு முடிதிருத்துபவருக்கும் காவல்துறையினர் ரூ.5,000 அபராதம் விதித்ததாகவும், எதிர்காலத்தில் இஸ்லாமிய அல்லாத முறையில் தாடியை வடிவமைக்க கூடாது என எச்சரித்ததாகவும் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமீன் தெரிவித்துள்ளார்.