மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு தஞ்சம் புக எல்லையோர ஆற்றை கடக்க முயன்ற 25 வயது இளைஞரும், 2 வயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்தனர். தந்தையின் சட்டைக்குள் உடல் புதைத்து கழுத்தை பற்றியபடி அந்த குழந்தையும் அந்த இளைஞரும் கேட்பாரின்றி இறந்து கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு காண்போர் நெஞ்சை உருக்கும் அளவிற்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
எல்சால்வடார் நாட்டை சேர்ந்த 25 வயது இளைஞன் மார்டினஸ், மனைவி தனியா வனேசா அவலோஸ், இரண்டு வயது நிரம்பாத மகள் வலேரியா ஆகிய மூவரும் கடந்த வார இறுதியில் அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மட்டமாரோஸ் நகருக்கு வந்துள்ளனர். அப்போது பிழைப்பிற்காக வழிதேடி அமெரிக்காவில் தஞ்சமடைய வந்த மார்டினஸ் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது சர்வேதச எல்லையில் உள்ள பாலம் திங்கள்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. ஆனால் மார்டினஸ் குடும்பம் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே பயணப்பட்டது. நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதால் கடந்து சென்று அமெரிக்காவில் குடியேரி விடலாம் என்ற நம்பிக்கையில் ஆற்றில் இறங்கினார் மார்டினஸ்.
அன்பு மகளை முதுகில் சட்டைக்குள் வைத்துக்கொண்டு நீச்சலடித்து சென்றுள்ளார் மார்டினஸ். ஆனால் அக்கரையை நெருங்கியபோது நீரின் சுழல் ஓட்டத்தில் மார்டினஸ் திணறியுள்ளார். இவர் பின்னே ஆற்றில் இறங்கிய மனைவி ஆற்றின் சீற்றத்தை கண்டு மெக்சிகோ கரைக்கே திரும்பிவிட்டார். ஆனால் மார்டினஸும் அவரது முதுகின் பின்புறம் சட்டைக்குள் புகுந்தபடி பயணித்த குழந்தை வலேரியாவும் இறந்துதான் கரை ஒதுங்கினர்.
ஜூலியா லீ தக் என்ற பத்திரிகையாளர் இதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். வளமான நாடுகளுக்கு புலம்பெயர்ந்து பிழைக்க செல்லும் மக்களுக்கு நடைபெறும் துயரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது இந்த புகைப்படம்.
பஞ்சம், போர், பட்டினிக்கு பலியாகும் மானுடத்தின் அவல நிலைகளை விளக்க பல புகைப்படங்கள் உள்ளன. அந்த புகைப்படங்களின் வரிசையில் இந்த புகைப்படமும் இன்று கைகோர்த்துள்ளது.