விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது போதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. இதில், குடிபோதையில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்த மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மூதாட்டி விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். உடையை கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்து கொண்ட மூதாட்டி, இருக்கைக்குத் திரும்பும் பொழுது இருக்கையில் சிறுநீர் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து பணியாளர்களிடம் கூறி சுத்தம் செய்து தரச்சொல்லி கேட்டபொழுது இதற்கும் பணியாளர்கள் சரியாகப் பதிலளிக்காமல் இருந்தது மட்டுமின்றி இருக்கையை சுத்தம் செய்தும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு மாற்று இருக்கையும் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மூதாட்டிக்கு மாற்று இருக்கை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். சந்திரசேகரன் இந்த சம்பவத்தினை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
மேலும், அலட்சியமாக இருந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.