பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறது பிரான்ஸ். 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான துவக்க விழா இன்று (26/07/2024) நடைபெற இருக்கிறது. இதனால் செயின் நதிக் கரையின் ஓரத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான நிகழ்ச்சிகளுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் என அனைவரும் சுமார் 162 படகுகள் மூலமாக செயின் நதிக்கரையில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
பிரான்ஸின் முக்கிய சின்னமாக விளங்கும் ஈபிள் கோபுரம் முன்பு லட்சக்கணக்கானோர் மத்தியில் விழாவானது தொடங்குகிறது. மொத்தமாக 5,250 ஆண் போட்டியாளர்களும், 5,250 பெண் போட்டியாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றது பிரான்ஸ்.
இந்நிலையில் பாதுகாப்பில் பிரான்ஸ் கோட்டைவிட்டது மாதிரியான சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது. ஒலிம்பிக் நடைபெறும் பிரான்சின் தலைநகர் பாரிஸிற்கு செல்லக்கூடிய விரைவு ரயில் சேவைகளை பாதிக்கும் அளவில் ஒரு சதிச் செயல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அங்கு ஒரு பதற்றத்தை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களும், லட்சக்கணக்கான மக்களும் பாரிஸ் நகரில் குவிந்து வரும் நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களின் தடங்களை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். லில்லே, போர்டாக்ஸ், ஸ்ட்ராஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய மூன்று வழித்தடங்களில் ரயில்களை கவிழ்க்க சதிச் செயல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏவுகணைகளை கொண்டு தண்டவாளங்களை தாக்கியும், தண்டவாளத்தின் மேல் வெடிகுண்டுகளை வைத்தும் வெடித்தும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது வரை இந்த சதிச் செயலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப் பேற்காத நிலையில் பதற்றத்தை எகிற வைத்துள்ளது இந்த தகவல்.