Skip to main content

சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் போடும் மூன்று நிபந்தனைகள்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

afghanistan

 

ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். நேற்று (13.08.2021) மட்டும் அவர்கள், 4 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில், பாதியைத் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புல்-இ-ஆலம் என்ற மாகாண தலைநகரைக் கைப்பற்றியுள்ள தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறிவருகின்றனர். தற்போது அவர்கள், காபூலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர். ஏற்கனவே தாலிபன்கள் 30 நாட்களில் காபூலைக் கைப்பற்றுவார்கள் என அமெரிக்கா கணித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே காபூல் தாலிபன் கைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அரசு, சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு தாலிபன்களை அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அழைத்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாலிபன்கள் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முதலாவதாக, ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள அனைத்து தாலிபன் தீவிரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் எனவும், இரண்டாவதாக ஐநாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் இருந்து  தங்களை நீக்கவேண்டும் எனவும் தாலிபன்கள் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் மூன்றாவதாக நாட்டின் அதிபர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்நாட்டு அமைச்சர் ஆகிய பதவிகளையும், இராணுவ தளபதி, ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை தலைவர் ஆகிய பதவிகளையும் தங்களுக்கு வழங்கவேண்டுமென தாலிபன்கள் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி பதவியை விட்டு விலகி, குடும்பத்தினரோடு மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்