Skip to main content

பாஞ்ஷிரின் நுழைவாயிலில் தலிபான் - எதிர்ப்புக்குழு கடும் மோதல்!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

panjshir

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதால், விரைவில் தலிபான்கள் தங்களது ஆட்சியை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையே ஆப்கான் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலே, தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனான அஹமத் மசூத்துடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு போராளி குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழு, இதுவரை தலிபான்களால் கைப்பற்ற முடியாத பாஞ்ஷிர் பகுதியில் தற்போது உள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான தலிபான்கள், பாஞ்ஷிர் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

 

இதனையடுத்து தலிபான்களுக்கும், தலிபான் எதிர்ப்புக்குழுவிற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக தலிபான்கள் பாஞ்ஷிர் பகுதியில் இணையச் சேவையையும், தொலைபேசி சேவையையும் முடக்கினர். மேலும், தலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி, தலிபான்கள் பாஞ்ஷிருக்குள் எந்த வித எதிர்ப்பும் இன்றி நுழைந்து வருவதாகத் தெரிவித்தார். ஆனால், இதனை எதிர்ப்புக்குழு திட்டவட்டமாக மறுத்தது.

 

இந்தநிலையில் பாஞ்ஷிரின் நுழைவு வாயிலான குல்பஹார் பகுதியில் தலிபான்களுக்கும், எதிர்ப்பு குழுவிற்கும் கடுமையான சண்டை நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலின் போது குல்பஹார் சாலையை பஞ்ச்ஷீருடன் இணைக்கும் பாலத்தை தலிபான்கள் தகர்த்ததாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

 

இதற்கு முன்னதாக, திங்கட்கிழமை இரவு பாஞ்ஷிர் மீது தலிபான்கள் தாக்குதலைத் தொடங்கியதாகவும், இருதரப்புக்கும் நடந்த மோதலில் 7 முதல் 8 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் தலிபான் எதிர்ப்பு குழு தலைவர் அஹமத் மசூத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்