இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, அங்கிருந்த தலிபான் ஆட்சியை அகற்றி, ஜனநாயக ஆட்சியை நிறுவினர். இதன்பின்னர் ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் 20 வருடங்களாக தொடர் சண்டை நடைபெற்றுவந்தது. இந்த சண்டையின்போது தலிபான்கள், ஆப்கன் இராணுவத்தின் மீதும், அமெரிக்கப் படைகள் மீதும் அவ்வப்போது தற்கொலை தாக்குதல்களை நடத்திவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியோடு அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறினர்.
இந்தநிலையில் தலிபான்கள், தங்களது இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை பிரிவினரை அதிகாரப்பூர்வமாக இராணுவத்தில் சேர்க்கவுள்ளனர். நாடு முழுவதும் சிதறியிருக்கும் தற்கொலை படைகளை சீர்திருத்தி ஒழுங்கமைத்து, அந்த படைகளை ஒரே பிரிவாக மாற்றி நாட்டை பாதுகாக்க பயன்படுத்தவுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை முறியடிக்கவே, தலிபான்கள் தற்கொலை படையினரை ஒன்றிணைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.