Skip to main content

வன்முறை மூண்ட இடம் செல்ஃபி பாயிண்ட்டாக மாறியது! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

sri lanka incident selfie point peoples

 

இலங்கையில் வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு இடையில் கொழும்பு காலிமுகத்திடலில்  மக்களின் அமைதி போராட்டம் தொடர்கிறது. இதேவேளையில், பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சிலர் சூறையாடினர். 

 

நாட்டை நெருக்கடியில் தள்ளிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு வன்முறை வெடித்தது. 

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்கள் கொளுத்தப்பட்டன. ராஜபக்சே பூர்வீக இல்லம் கொளுத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த இடம் தற்போது செல்ஃபி பாயிண்ட்டாக மாறியுள்ளது. 

 

மஹிந்த ராஜபக்சே பதவி விலக காரணமான, இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படமாகப் பதிவு செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், இங்கு பலரையும் செல்போன் கையுமாகப் பார்க்க முடிகிறது. 

 

காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தனர். பெட்ரோல், டீசலை வாங்கவும், உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆயினும், கொழும்பு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, காலிமுகத்திடலில் அமைதி வழிபோராட்டம் நடத்துவோரைக் கலைக்க நீதிமன்றம் மூலம் காவல்துறை முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கடை நீதிமன்றம் முன்பாக பொதுமக்கள் மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்