இலங்கையில் நேற்று அடுத்தடுத்த 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடந்த குண்டு வெடிப்புகளின் ஒருவன் மனித வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கான புகைப்படத்தை இலங்கை அரசு வெளியிட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் தீவிர சோதனையில் இலங்கை ராணுவம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குண்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
அதே சமயம் இன்று இரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன. ஏற்கெனவே சமூக வலைதளங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனாரத்ன கூறுகையில் இலங்கையில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும், இது வரை இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 24 பேரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ’நேஷ்னல் தவ்ஹீத் ஜமாத்’ அமைப்பு மீது சந்தேகம் இருப்பதாகவும் பன்னாட்டு அரசுகளின் ஆதரவுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இலங்கை முழுவதும் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை அமைச்சரிடம் உறுதியளித்தார்.
பி.சந்தோஷ்,சேலம்.