இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் புதிய ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாச. மேலும் மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்வதாக சஜித் அறிவிப்பு. அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் என்றார்.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16/11/2019) நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தற்போதைய (11.25AM) நிலவரப்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 36,79,405 வாக்குகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் இவரின் வாக்குகள் சுமார் 50% எட்டியது. இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான வடக்கு மாகாணத்தில் சஜித்க்கு அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி தேவையான 50% வாக்குகளை கடந்த நிலையில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு, தொண்டர்களுக்கு பொதுஜன கட்சி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் 8- வது அதிபராக கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை, தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அதை தொடர்ந்து அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்கவுள்ளார்