தென்னாப்பிரிக்கா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பைக் ப்ரோட்டினில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளுடன் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளைக் கொண்டுள்ள இந்த ஒமிக்ரான், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனா அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் உலகமெங்கும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு, ஆபத்தான புதிய வகை கரோனாவை உருவாக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அவசரநிலை அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது; ஒமிக்ரான் எவ்வளவு அதிகமாக பரவுகிறதோ, எவ்வளவு அதிகமாக நகலெடுத்துக்கொள்கிறதோ, அந்தளவிற்கு புதிய கரோனா திரிபு உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.
இப்போது ஒமிக்ரான் ஆபத்தானது, அது மரணத்தை ஏற்படுத்தலாம். அதன் தீவிரம் டெல்டாவை விட சற்று குறைவாக இருக்கலாம், ஆனால் அடுத்த திரிபு எவ்வாறு இருக்கும் என யாரால் சொல்ல முடியும்?. ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது அது கடுமையாக பாதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும், இறக்க வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு கேத்தரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.