நேற்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "பயங்கரவாதத்தின் ஆட்சி முடிந்துவிட்டது. டெல்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானிக்கு பங்கு இருந்தது. ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், பாக்தாத் தூதரகம் மீதான தாக்குதல் ஆகியவை சுலைமானி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா இதனை முன்பே செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
சமீபத்தில் ஈரானில், சுலைமானியின் திட்டப்படி, எதிர்ப்பாளர்களை அடக்கும் செயலில் 1,000 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் தங்கள் அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சுலைமானி கொல்லப்பட்டது போருக்கு வழிவகுக்காது. ஈரானிய மக்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்கள் நம்பமுடியாத பாரம்பரியத்தையும், ஆற்றலையும் கொண்டவர்கள். நாங்கள் போரைத் தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஒரு போரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.