சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா!
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா யாக்கோப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபராக இருந்த டோனி டான் கெம் யாங்கின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதையடுத்து சிங்கப்பூர் நாட்டு அதிபருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு(செப்.13) நிறைவடைந்தது.
சிங்கப்பூரில் அதிபராவது அதிக கெடுபிடியான விஷயம். மேலும், மலாய் இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதிபர் பதவிக்காக போட்டியிட முடியும் என்ற விதிமுறையும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஹலீமா யாக்கோப் உட்பட ஐந்துபேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதில் ஹலீமா உட்பட மூன்று பேருடைய வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மூன்றுபேரில் சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகியோரின் வேட்புமனுக்களும் தேவையான இரண்டு விதிமுறைகளில் ஒன்றை பூர்த்திசெய்யத் தவறியதால், இந்தத் தேர்தலில் போட்டியிட அவர்கள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹலீமா யாக்கோப் சிங்கப்பூர் நாட்டின் அதிபராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இன்று மாலை சிங்கப்பூரின் 8வது அதிபராக பதவியேற்கும் ஹலீமா, அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.
இவருக்கு, இந்திய பிரதமர் மோடி உட்பட உலகநாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்