இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.
இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.
இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.