கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கனடாவில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ 2 ஆம் தேதி டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டு சேர்வதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், அவர்கள் கற்றுக்கொள்ளவும், வளரவும், அவர்களின் முழு திறனை அடையவும் இந்த மதிய உணவு திட்டம் உதவுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு தலைமுறை முதலீடாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதை உறுதிசெய்ய, மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும். உணவுக்கான அணுகல் பற்றாக்குறை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இன மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகளை விகிதாச்சாரமாக பாதிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வளரும் குழந்தைகளின் தட்டுகளில் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது, பொருளாதாரத்திற்கும் நல்லது. இது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அதே வேளையில், குடும்பங்களின் அழுத்தத்தைக் குறைத்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாக முதலீடு செய்ய உதவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டு வந்தது. அதன்படி, இந்தத் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கனடா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், இது போன்று உணவு திட்டங்கள் கொண்டு வருவதில் இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே தமிழ்நாடு முன் மாதிரி என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சிலர் திராவிட மாடல் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் பாலோ செய்ய மட்டும் அல்ல. உலகிற்கே வழி காட்டுவது எனவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.