Skip to main content

பதற்றத்தில் மாநிலம்; பதக்கம் வென்ற மணிப்பூர் வீரர்!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

silver medalist Roshibina Devi says Dedicated to the people of Manipur

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், 6வது நாளான இன்று, வுஷூ விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

 

வுஷூ விளையாட்டின் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக மணிப்பூரைச் சேர்ந்த ரோஷிபினா தேவி பங்கேற்று விளையாடினார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷூ மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார். இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியதால் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரோஷிபினா தேவி, “வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. இந்த போட்டியில் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். இந்த ஆட்டத்தில் நான் செய்த தவறுகளை சரி செய்துகொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவேன். நான் பெற்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தியபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், ஏராளமான பொருட்கள் சேதமடைந்து, 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த மாநிலத்தில் இருந்து ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட ரோஷிபினா தேவி  வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்