ராமர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனா எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து இந்தியாவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் கே.பி.சர்மா ஒலி. அந்தவகையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும், அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "உண்மையான அயோத்தி பிர்கஞ்சின் மேற்கில் உள்ள தோரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், ராமர் இந்தியாவில் பிறந்தார் என்று இந்தியா கூறுகிறது. இந்தத் தொடர்ச்சியான கூற்றுகள் காரணமாக, சீதா இந்தியாவின் இளவரசர் ராமரை மணந்தார் என்று நாங்கள் நம்பி வந்தோம். இருப்பினும், உண்மையில், அயோத்தி பிர்கஞ்சிற்கு மேற்கே அமைந்துள்ள ஒரு கிராமம் எனத் தெரிய வந்துள்ளது.
சீதா திருமணம் செய்த ராமர் ஒரு இந்தியர் என்ற நம்பிக்கையின் கீழ் இப்போது வரை நாங்கள் இருந்தோம். ஆனால் அவர் இந்தியர் இல்லை, அவர் நேபாளி. பால்மிகி ஆசிரமும், மகனைப் பெறுவதற்கான மன்னர் தசரதர் சடங்குகள் செய்த புனித ஸ்தலமும் ரிடியில் உள்ளது. சீதாதேவியின் ஜானக்பூர் இங்கேயும், அயோத்தி அங்கேயும் இருக்கிறது. அந்தக்காலத்தில், திருமணம் பற்றிப் பேச தொலைபேசியோ, மொபைலோ இல்லை. அப்படி இருக்கும் போது ராமருக்கு ஜானக்பூர் பற்றி எப்படித் தெரியும்" எனக் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.