மெக்சிகோ வழியாக அனுமதியின்றி அமெரிக்கா வருபவர்களை தடுக்கும் விதத்தில் அமெரிக்க எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார்.
இந்த திட்டத்திற்கான 40,540 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், நிதி ஒதுக்கவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு டிரம்ப் இதற்கான நிதியை பெற்றார். தற்போது இருநாட்டு எல்லை பகுதிகளில் சுவர் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு இரு நாட்டு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் சுவர்களுக்கு இடையே சீசாக்கள் அமைத்து இரு நாட்டை சேர்ந்த மக்களும் தங்கள் குடும்பங்களுடன் விளையாடி வருகின்றனர். கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் ரஃபேல், சான் ஜோஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஃப்ராடெல்லோ ஆகியோர் இணைந்து இந்த சீசாக்களை அமைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய பேராசிரியர் ஃபராடெல்லோ, "இது நம்பமுடியாத பேரணுபவமாக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த சுவர் இப்போது அமெரிக்ககா - மெக்சிகோ இடையேயான நட்புறவை நிர்ணயிக்கும் மையப் புள்ளியாக மாறியிருக்கிறது. ஒருமுனையில் நிகழும் செயலின் தாக்கம் மறுமுனையில் தெரியும் என்பதே சீசா விளையாட்டின் தத்துவம். அந்த தத்துவம் தற்போது அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளுக்கான உறவுக்கும் பொருந்தும்" என தெரிவித்துள்ளார். இந்த சுவர்களுக்கு மத்தியில் குழந்தைகள் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Seesaw at the Mexico/USA border. ❤️ pic.twitter.com/1MSY3N93zl
— MEME IS THE ONLY LUXURY (@camerongrey) July 30, 2019