பல்லாண்டுகளாகவே 'ஏலியன்' என்ற கூற்று மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே வருகிறது. ஆராய்ச்சிகள் ஒருபக்கம் என்றால் மறுபுறம் ஏலியன் தொடர்பான கட்டுக் கதைகளுக்கும் உலகில் பஞ்சமில்லை. வெளிநாடுகளில் தான் ஏலியன் குறித்த கதைகள் அதிகம் என்ற நிலையில் அண்மையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் ஏலியனுக்கு ஒருவர் கோயில் கட்டியது என உள்ளூர் வரை பரவிக் கிடக்கிறது ஏலியன் டாக்.
இந்நிலையில் உண்மையில் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற அந்த கேள்விக்கு விடை தேடி இன்று புறப்பட இருக்கிறது நாசாவின் விண்கலம். அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலமாக 'யூரோபா கிளிப்பர்' என்ற விண்கலமானது பாய உள்ளது. வியாழனை சுற்றியுள்ள கோள்களில் ஒன்றான யூரோபா எனும் நிலவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்ட இருக்கிறது.
யூரோபாவின் உறைபனிக்கு கீழே மிகப்பெரிய உப்பு நீர் பெருங்கடல் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்தது. எனவே அங்கு உயிரினங்கள் வாழக் கூடும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இன்று அனுப்பப்படும் இந்த விண்கலம் யூரோபாவின் பனிப்பாறைகளையும் அதன் அடியில் இருக்கும் கடலின் மாதிரிகளை ஆய்வு செய்ய இருக்கிறது. ஆனால் இந்த பயணமும் சோதனையும் அவ்வளவு எளிதானதோ அல்லது உடனடியாக நடைபெறும் விஷயமோ அல்ல. காரணம் பூமியிலிருந்து சுமார் 180 கோடி மைல் தொலைவில் உள்ள வியாழனின் யூரோபா நிலவை இன்று அனுப்பப்படும் 'யூரோபா கிளிப்பர்' விண்கலம் 2030 ஆம் ஆண்டுதான் அடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல இடையூறுகளை தாண்டி யூரோபா கிளிப்பரின் பயணமும், சோதனையும் முடிவுற்றால் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறது நாசா.