கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. சமூக இடைவெளி மட்டுமே தற்போது கரோனா பரவலைக் குறைப்பதற்கான வழியாகப் பார்க்கப்படும் நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியைச் செயல்படுத்துவது சவாலான காரியம் என்பதால், பெரும்பாலான நாடுகள் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்தன. மேலும், தற்போதைய சூழலில் கரோனா குறைந்துள்ள சில நாடுகள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்துள்ளன. இருப்பினும் பல நாடுகளில் கல்வி நிலையங்கள் திறப்பிற்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கல்வித்துறைச் செயலர் லியோனர் பிரியோனஸ் கூறும்போது, ''கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க முடியாது. எனவே, குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது நிச்சயம் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். ஆனால், ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமை மற்றும் இணைய இணைப்பு இல்லாத காரணம் ஆகியவற்றால் சில குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.