சவுதியை சேர்ந்த ரஹாஃப் மொகமது அல் குனான் என்னும் 18 வயது இளம்பெண், தனது குடும்பத்தினர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகக் கூறி அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்தார். அப்பொழுது குடும்பத்தினருடன் விமான நிலையம் சென்ற பொழுது அவர்களிடமிருந்து தப்பித்து வந்துள்ளார். மேலும் தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்த அவர், அதற்காக தாய்லாந்து வந்த பொழுது சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களும் அதிகாரிகள் வசம் சென்றன. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண், ''குவைத் ஏர்வேஸ் விமானத்தில் என்னை குவைத்துக்கு நாடு கடத்துவதற்காக முடிவு செய்திருக்கின்றனர். இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்க தேவையான பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி ''என்னை மீண்டும் சவுதிக்கு அனுப்பினால் என் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவர். இது 100 சதவீதம் உண்மை'' எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குவைத் அதிகாரிகள் தன்னை அழைத்து செல்லாமல் இருப்பதற்காக ஹோட்டல் அறையிலுள்ள பொருட்களை வைத்து அரண் போல் அமைத்து அதன் உள்ளே அவர் இருந்து வருகிறார். அவரின் வெளியுலக தொடர்பு நிறுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது'' என்று தெரிவித்துள்ளது.