இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது மெக்காவுக்குப் புனித பயணம் மேற்கொள்வார்கள். இந்தப் பயணம் ‘ஹஜ் பயணம்’ என அழைக்கப்படுகிறது. இது ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே நடைபெறும். இதனைத் தவிர இஸ்லாமியர்கள், மெக்காவுக்கும் மெதினாவுக்கும் உம்ரா என்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வார்கள். இந்தப் பயணத்தை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
ஆனால் கரோனா காரணமாக இஸ்லாமியர்கள், இந்தப் புனித பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 18 மாதங்களுக்கு முன்பு, சவுதி அரேபிய அரசு, தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டுப் பயணிகள் வருவதைத் தடை விதித்தது. இதனால் வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை.
இந்தநிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் உம்ரா புனித பயணத்தை மேற்கொள்ளும் பொருட்டு, மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள வெளிநாட்டினரை, சவுதி அரேபிய அரசு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்துவருகிறது.
ஆஸ்ட்ராசெனகா, மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளை சவுதி அரேபிய அரசு அங்கீகரித்துள்ளது. உம்ரா புனிதப் பயணத்திற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கும் முடிவினையடுத்து, அடுத்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள ஹஜ் பயணத்திற்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட, சவுதியில் வசிக்கும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த மாதம் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.