உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுஉலை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பற்றியெரியும் காட்டுத்தீ அந்நாட்டில் புதிய பதட்டத்தை உண்டாக்கியுள்ளது.
உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செர்னோபில் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பற்றியெரிந்து வரும் காட்டுத்தீ, தற்பொழுது செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயின் காரணமாகக் கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என கிரீன்ஸ்பீஸ் ரஷ்யா திங்களன்று எச்சரித்த சூழலில், இந்த தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு உலகின் மிகமோசமான அணு உலை விபத்தான, செர்னோபில் அணுஉலை விபத்து நடந்த அந்த அணுஉலை பகுதியைச் சுற்றி சுமார் 30 கிலோமீட்டர் அளவிற்கு இருக்கும் வனப்பகுதி முழுவதும் கடந்த ஒருவாரத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதி, இந்த காட்டுத்தீ 20 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பரவியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்த சூழலில், க்ரீன்பீஸ் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு 12,000 ஹெக்டேர் பரப்பளவில் தீ இருப்பதைக் காட்டியது. எனவே அரசாங்கம் உண்மையை மறைப்பதாக அந்நாட்டு மக்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு நடவடிக்கையாக நேற்று விமானம் மூலம் தீ ஏற்பட்டுள்ள பகுதியில் 538 டன் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தீ குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், பெரும்பாலான இடங்களில் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் ஆங்காங்கே அதிகளவிலான தீ இருப்பதால், அதனை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் நாட்டில் 3000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, நோய் குறித்த அச்சம் நிலவிவரும் நிலையில், அந்நாட்டு மக்களிடையே இந்த காட்டுத்தீ மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.