அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குக் கனடா நாட்டு முகவரியிலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடித்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனைச் சோதித்து பார்த்தபோது, அதில் உயிரைக் கொல்லக்கூடிய விஷம் தடவப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கடிதத்தை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்திய அதிகாரிகள், ட்ரம்ப்பின் உயிருக்கு குறிவைத்து இந்த கடிதம் அனுப்பப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.