
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17வது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05.04.2025) மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 51 பந்துகளில் 77 ரன்களையும், அபிஷேக் போரல் 20 பந்துகளில் 33 ரன்களையும், டிரிஸ்டான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 24 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் வெற்றி பெறச் சென்னை அணிக்கு 184 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்தது. எனவே 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 69 ரன்களை குவித்தார்.
அதே போன்று தோணியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். மேலும் சிவம் டியூபே 15 பந்துகளில் 18 ரன்களையும் குவித்தார். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய 3 போட்டிகளிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. அதே சமயம் அடுத்தடுத்து 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைச் சந்தித்துள்ளதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதோடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி அணி சென்னையை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.