உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்தார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் கூறுகையில், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக புடின் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கும் ரஷ்யா அதிபர் புதின் தயாராக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.