உலகநாடுகள் பங்குபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று பருவநிலை தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயதான சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத உலக தலைவர்களை அவர் கடுமையாக சாடினார்.
இந்த கூட்டத்தில் பேசிய கிரேட்டா, "வெற்று வார்த்தைகளால் எனது குழந்தை பருவத்தையும், கனவுகளையும் திருடி விட்டீர்கள். நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி என கற்பனை உலகை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்.
சுற்றுசூழல் மாசுபாடு மக்களை கொன்றுகொண்டிருக்கிறது. இதனை தடுக்க நீங்கள் உண்மையாக முயற்சி எடுக்காவிட்டால், நீங்கள் அரக்கர்களாகத்தான் இருக்க போகிறீர்கள்" என உலக தலைவர்களை கடுமையாக சாடினார். கிரேட்டாவின் இந்த பேச்சு உலக அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் கிரெட்டாவை பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்,”பூமியை பாதுகாக்கும் பொறுப்பை நமது குழந்தைகளிடம் விடுவது முற்றிலும் அழகற்றது. கிரெட்டா நீங்கள் ஒரு முன் மாதிரி. இதற்கு மேலும் எந்த சாக்கும் கூற முடியாது. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான பூமியை அளிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இது மாற்றத்திற்கான நேரம் ” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.