இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினை சேர்ந்த தேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெகாத் மெய்சென் உயிரிழந்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேநேரம் இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் அதிபரை நேரில் சந்தித்துள்ளார். டெல் அவிவ் நகரத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது ரிஷி சுனக் ஆலோசனை நடத்தி வருகிறார். சர்வதேச சட்டத்திற்கு இணங்க நாட்டின் தற்காப்பு உரிமையை இங்கிலாந்து உறுதியாக நம்புகிறது என இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அவசர மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதும் அவசியம் என அவர் பேசியதாக, பிரிட்டன் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.