ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க முன்வந்துள்ளன. மேலும் சில நாடுகள். தாலிபன்களில் நடவடிக்கைளை பொறுத்து தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கவுள்ளன.
இந்தநிலையில் தாலிபன் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் கனடாவிடம் இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கனடா அவர்களை அங்கீகரிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "தற்போது எங்களது கவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியே அழைத்து வருவதில்தான் இருக்கிறது. தலிபான்கள், மக்கள் எந்த தடையும் இல்லாமல் விமான நிலையத்திற்கு வருவதை உறுதி செய்யவேண்டும்" எனவும் கூறியுள்ளார்.