போட்ஸ்வானா வனப்பகுதியில் 330 யானைகள் உயிரிழந்ததற்கு சயனோபாக்டீரியா என்னும் நச்சுப்பொருளே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வன உருவாக்கத்தில் மிக முக்கிய பங்குடைய உயிரினமான யானை இனம், உலகின் பல நாடுகளில் அழிவை நோக்கி பயணித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிரிக்க வனப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக மர்மமான முறையில் யானைகள் உயிரிழப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவிலான யானை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனை மையமாக கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்க்யூ எனும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டாக்டர் மெக்கான் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 330-க்கும் அதிகமான யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், யானைகளின் தொடர் இறப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில் கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு யானைகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த ஆய்வுகளின் முடிவில், இயற்கை நச்சுகள் காரணமாகவே இந்த யானைகள் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், சயனோ பாக்டீரியா என்னும் நச்சுப்பொருள் நீரில் உற்பத்தியானதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த நச்சுத்தன்மை கலந்த நீரை யானைகள் அருந்தியதாலேயே 330 யானைகள் பலியாகின என்றும், ஆனால் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.