இந்தியாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளையும், அவரது 47 வருட திரைப்பயணத்தையும் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் உள்ள டெலவர் மாகாணத்தில் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிகள் டெலவர் ப்ரண்ட்ஷிப் கிரிக்கெட் லீக் (DELAWARE FRIENDSHIP CRICKET LEAGUE) என்கிற அமைப்பு சார்பில் டெலவரில் உள்ள லம்ஸ்பாண்ட் மாநில கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றது. அந்த 6 அணிகளுமே பில்லா, பாட்ஷா, கபாலி, ராஜாதிராஜா, பாபா, சிவாஜி போன்ற ரஜினிகாந்த் படப்பெயர்களைக் கொண்டுதான் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களும் விளையாடினர்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் பாபா அணி வெற்றி பெற்று "தலைவர் கோப்பையை" கைப்பற்றியது. மேலும், கபாலி அணி இரண்டாம் இடமும், சிவாஜி அணி மூன்றாம் இடமும் பெற்றது. அதைத்தொடர்ந்து, டெலவர் பெருநிலத்தமிழ் சங்கத் தலைவர் வெங்கட் தலைமையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.