ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா நான்கு ஆண்டுகால இழுபறிக்கு பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியளிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள், அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை’பிரெக்சிட்’ என்று அழைக்கப்பட்டது. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் உடன்பாடில்லாத அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
இதனை அடுத்து தெரசா மே பதவி ஏற்றார். பிரிட்டன் விலகுவதற்கு, அந்த கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தெரசா மே பதவி விலகி, கடந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். தற்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து வரும் 31 ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்ப யூனியனிலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.