நாட்டில் ஊழல், வேலையின்மை, மோசமான பொருளாதார சூழல் ஆகியவற்றை எதிர்த்து ஈராக் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
ஈராக் நாட்டில் அரசையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டின் தலைநகரான பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை, பாக்தாத்தின் மத்திய சதுக்கத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக பேரணி சென்றனர்.
அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி பேரணியை கலைக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நடந்த சண்டைகள் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 34 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 31 பேர் போராட்டக்காரர்கள். 3 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர். மேலும் 1500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.